Friday, July 7, 2017

பிரதோஷ மஹிமை

*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்-*
############################

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]..

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

*20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.*

1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்...

#ommm nama sivayaa..

Thursday, July 6, 2017

51 சக்தி பீடங்கள்

51 சக்தி பீடங்கள்

சக்தி பீடங்களில் காமரூபம் எனும் தலத்தில் உறையும் அஜாமுகீ தேவியானவள் நம் உடலின் தலைப்பகுதியில் உறைவதாக நூல்கள் கூறுகின்றன.

இதே போன்று வாரணாஸி எனும் தலத்தில் உறையும் அதர்வணீ தேவியானவள் நம்
உடலின் முகவட்டத்தில் உறைகிறாள்.

நேபாலம் எனும் தலத்தில் உறையும் இலா தேவியானவள் நம் உடலின் வலது கண்ணில் உறைகிறாள்.

பெளண்ட்ரவர்த்தனம் எனும் தலத்தில் உறையும் ஈஸ்வரி தேவியானவள் நம் இடது கண்ணில் உறைகிறாள்.

புரஸ்திரகாஷ்மீரம் எனும் தலத்தில் உறையும் உக்ரா தேவியானவள் நம் வலது காதில் உறைகிறாள்.

கன்யாகுப்ஜம் எனும் தலத்தில் உறையும் ஊகாரோர்ஜ்வலா தேவியானவள் நம் இடது காதில் உறைகிறாள். .

பூர்ணாசலம் எனும் தலத்தில் உறையும் ருதுதாமா தேவியானவள் நம் மூக்கின் வலது மடிப்பில் உறைகிறாள்.

அற்புதாசலம் எனும் தலத்தில் உறையும் ரேணுகா தேவியானவள் நம்  மூக்கின் இடது மடிப்பில் உறைகிறாள்.

ஆம்ராதகேச்வரம் எனும் தலத்தில் உறையும் லுதம்பரா தேவியானவள் நம் வலது
கன்னத்தில் உறைகிறாள்.

ஏகாம்பரம் எனும் தலத்தில் உறையும் லூஞ்சிகா தேவியானவள் நம் இடது கன்னத்தில் உறைகிறாள்.

த்ரிஸ்ரோதம் எனும் தலத்தில் உறையும் ரேவதி தேவியானவள் நம் மேல் உதட்டில் உறைகிறாள்.

காமகோடி எனும் தலத்தில் உறையும்  சுஷ்கரேவ்தி தேவியானவள் நம் கீழ் உதட்டில் உறைகிறாள்.

கைலாஸம் எனும் தலத்தில் உறையும் அஸ்வினீ தேவியானவள் நம் மேற்பற்களில் உறைகிறாள்.

ப்ருகுநகரம் எனும் தலத்தில் உறையும் கராலி தீர்க்கஜிஹ்வா தேவியானவள் நம் கீழ்பற்களில் உறைகிறாள்.

கேதாரம் எனும் தலத்தில் உறையும் அஞ்சனாபாஞ்சனா தேவியானவள் நம் நாக்குநுனியில் உறைகிறாள்.

சந்த்ரபுஷ்கரணி எனும் தலத்தில் உறையும் த்வஜா தேவியானவள் நம் கழுத்தில்
உறைகிறாள்.

ஸ்ரீபுரம் எனும் தலத்தில் உறையும் பூதவிந்யாஸிநீ தேவியானவள் நம் வலது தோளில் உறைகிறாள்.

ஓங்காரம் எனும் தலத்தில் உறையும் கத்யோதினி தேவியானவள் நம் வலது முழங்கையில் உறைகிறாள்.

ஜாலந்தம் எனும் தலத்தில் உறையும் தூம்ராதேவியானவள் நம் வலது மணிக்கட்டில் உறைகிறாள்.

மாதவம் எனும் தலத்தில் உறையும் க்ருசோதசீ தேவியானவள் நம் வலது கைவிரல்களடியில் உறைகிறாள்.

குலாந்தகம் எனும் தலத்தில் உறையும் அனந்தசக்தி தேவியானவள் நம் வலது கை விரல்நுனிகளில் உறைகிறாள்.

தேவிகோடம் எனும் தலத்தில் உறையும் சூஷ்மா தேவியானவள் நம் இடது தோளில் உறைகிறாள்.

கோகர்ணம் எனும் தலத்தில் உறையும் சநிர்ஜரா தேவியானவள் நம் இடது முழங்கையில் உறைகிறாள்.

மாருதேஸ்வரம் எனும் தலத்தில் உறையும் போகதா தேவியானவள் நம் வலது மணிக்கட்டில் உறைகிறாள்.

அட்டஹாஸம் எனும் தலத்தில் உறையும் நிர்ஜரநதீ தேவியானவள் நம் இடது கைவிரல்களில் உறைகிறாள்.

விரஜா எனும் தலத்தில் உறையும் ப்ரபோநீ தேவியானவள் நம் இடது கைவிரல் நுனியில் உறைகிறாள்.

ராஜக்ருஹம் எனும் தலத்தில் உறையும் தாரிணி தேவியானவள் நம் வலது
தொடையின் மேற்பகுதியில் உறைகிறாள்.

மகாபதம் எனும் தலத்தில் உறையும் க்ரியா சரஸ்வதீ தேவியானவள் நம் வலது முழங்காலில் உறைகிறாள்.

கோலாபுரம் எனும் தலத்தில் உறையும் பஞ்சவக்த்ரா தேவியானவள் நம் வலது கணுக்காலில் உறைகிறாள்.

ஏலாபுரம் எனும் தலத்தில் உறையும் ஸ்ரீதனாக்யா தேவியானவள் நம் வலது கால் விரலடியில் உறைகிறாள்.

காலேச்வரம் எனும் தலத்தில் உறையும் நந்தசக்தி தேவியானவள் நம் வலது கால்விரல் நுனியில் உறைகிறாள்.

ஜயந்தி எனும் தலத்தில் உறையும் சரஸ்வதீ தேவியானவள் நம் இடது தொடையின் மேல் பகுதியில் உறைகிறாள். 

உஜ்ஜயினி எனும் தலத்தில் உறையும் நீலகண்ட சரஸ்வதீ தேவியானவள் நம் இடது முழங்காலில் உறைகிறாள்.

சித்ரா எனும் தலத்தில் உறையும் போகதாயிநீ தேவியானவள் நம் இடது கணுக்காலில் உறைகிறாள்.

க்ஷீரிகா எனும் தலத்தில் உறையும் ஸ்யாமளா தேவியானவள் நம் இடது கால் விரல் அடியில் உறைகிறாள்.

ஹஸ்தினாபுரம் எனும் தலத்தில் உறையும் நந்தசக்தி தேவியானவள் நம் இடது கால் விரல் நுனியில் உறைகிறாள்.

பட்டீசம் எனும் தலத்தில் உறையும் இச்சாசக்தி தேவியானவள் நம் வலது விலாப்புறம் உறைகிறாள்.

ப்ரயாகை எனும் தலத்தில் உறையும் அதபகோமலா தேவியானவள் நம் இடது விலாப்புறம் உறைகிறாள்.

சஷ்டீசம் எனும் தலத்தில் உறையும் சித்ஸ்யாமளா தேவியானவள் நம் முதுகில் உறைகிறாள்.

மாயாபுரி எனும் தலத்தில் உறையும் ரூபஸ்யாமளா தேவியானவள் நம் நாபியில் உறைகிறாள்.

ஜலேசம் எனும் தலத்தில் உறையும் வித்யாஸ்யாமளா தேவியானவள் நம் வயிற்றில் உறைகிறாள்.

மலயாசலம் எனும் தலத்தில் உறையும் தீபினீ தேவியானவள் நம் இதயத்தில் உறைகிறாள்.

ஸ்ரீசைலம் எனும் தலத்தில் உறையும் ரேசிகா தேவியானவள் நம் வலது தோள்பட்டையில் உறைகிறாள்.

மேரு பீடம் எனும் தலத்தில் உறையும் மோஹினி தேவியானவள் நம் பிடரியில் உறைகிறாள்.

கிரிவரம் எனும் தலத்தில் உறையும் நாராயணீ தேவியானவள் நம் இடது தோள்பட்டையில் உறைகிறாள்.

மாஹேந்த்ரம் எனும் தலத்தில் உறையும் மங்களகெளரீ தேவியானவள் நம் இதயம் முதல் வலது கை நுனிவிரல் வரை உறைகிறாள். 

வாமனம் எனும் தலத்தில் உறையும் பானுக்ரியா தேவியானவள் நம் இதயம் முதல் இடது கை நுனிவிரல் வரை உறைகிறாள்.

ஹிரண்யபுரம் எனும் தலத்தில் உறையும் ஸித்க்ரியா தேவியானவள் நம் இதயம் முதல் வலது கால் நுனிவரை உறைகிறாள்.

மஹாலக்ஷ்மிபுரம் எனும் தலத்தில் உறையும் ஆத்யானி தேவியானவள் நம் இதயம் முதல் இடதுகால்நுனிவிரல் வரை உறைகிறாள்.

ஒட்யாணாம் எனும் தலத்தில் உறையும் பந்தமோசனீ தேவியானவள் நம் இதயம் முதல் இன உறுப்பு வ்ரை உறைகிறாள்.

சாயாபீடம் எனும் தலத்தில் உறையும் மாயாமாலினீ தேவியானவள் நம் இதயத்திலிருந்து உச்சி வரை உறைகிறாள். அண்டத்திலுள்ளதே பிண்டத்தில் உள்ளது என்பது ஆன்றோர் வாக்கு. அதுபோலவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சக்தி பீடத் தலங்களில் உள்ள தேவியரே நம் உடலில் சூட்சுமமாக உறைகின்றனர். இப்படி உறைபவளை ரிஷிகள் ஞானக் கண்கொண்டு அறிந்து அதற்குரிய மந்திரத்தை ஜபித்து தரிசித்தனர். அதையே நமக்கும் இங்கு வழியாக காண்பித்துக்கொடுக்கின்றனர். எனவே, சக்தி பீடங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அந்தந்த உடல் உறுப்பில் உறையும் மகாசக்தியை தியானித்து வணங்கலாம். மகாசக்தியின் பேரருளை பெறலாம்.

பகிர்வு
வலைதளம்