Thursday, January 7, 2021

முக்குண வேளையும் விளக்கமும்

   மானுட ஜனன விகிர்தியில் முகூர்த்தம் என்பது 2 நாழிகை அளவாகும். இந்த முகூர்த்த காலம் பகலில் 15 முகூர்த்தங்களாகவும், இரவில் 15 வரையரை செய்யப்பட்டு ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் என்றும், ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு தேவகணத் தலைவர் அதிதேவதாவாக இருப்பார்.
    அதுபோலவே, ஒரு நாளின்  சூரிய உதய நாழிகையிலிருந்து மூன்றேமுக்கால் நாழிகை  ( அதாவது 1 மணி 20 நிமிடம் ) என்ற விகிதத்தில் முக்குண வேளை கணிதமிடப்பட்டிருக்கின்றது  .
  திங்கள், வியாழன் நாட்களில் முதலில் சாத்வீக வேளையும், செவ்வாய், வெள்ளி நாட்களில் இராஜஸ வேளையும், ஞாயிறு, புதன், சனி நாட்களில் தாமஸ வேளையும் அந்தந்த நாட்களின் சூரிய உதய நேரத்திலிருந்து வரிசைக்கிரமமாக நடைபெறும் என்பதால், 
      இந்த முக்குண வேளை என்பது சாத்வீகம், இராஜஸம், தாமஸம் என்றும் வகைப்பட்டுத்தப்பட்டிருப்பதை பெரும்பாலும் நாமும் அறிவோம். இந்த முக்குணவேளையானது ஜனனமிக்கும் ஒவ்வொரு சிசுவின் குணாகுணங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுகின்றது என்றால் அதுமிகையில்லை. 
     ஆகவே, ஒரு மனிதன் பிறந்த நேரமானது 
      சாத்வீக வேளையில் அமைந்திருந்தால் தேகப்பொலிவு உள்ளவனாகவும், அறிவாளியாகவும், புத்திசாலித்தனம் மிகுந்தவனாகவும் லௌகீக இன்பங்களையெல்லாம் அனுபவிப்பவனாகவும், பெரியோர்களிடத்தில் மரியாதையும், பக்தியும் உள்ள நாகரீகமான வாழ்க்கையை வாழ விரும்புபவனாகவும் இருப்பான்.
  இராஜஸ வேளையில் பிறந்தவராக இருந்தால்,
    மக்களுக்குப் பயன்படும்படியான காரியங்களைச் செய்பவனாகவும், தான தர்மங்களை இயற்றும் அதிகாரம், அந்தஸ்தும் பெற்று அரசனைப்போன்ற வாழ்க்கையுடையவனாக வாழ்வான்.
   ஒருவேளை தாமஸ வேளையில் பிறந்தவரென்றால் மயக்கமும், சோம்பலும் உடையவனாகவும், சதாகாலமும் பல இடங்களைக் கண்டு சுற்றித்திரிபவனாகவும், சுறுசுறுப்புகுறைந்தவனாகவும், பொய் சொல்லத் தயங்காதவனாகவும், தூக்கத்தில் அதிக பிரியமுள்ளவனாகவும், போஜனப்பிரியனாகவும், கல்வியில் தடை உள்ளவனாகவும் வாழ்ந்திருப்பான்.
    ஆகவே, ஒரு ஜாதகத்தில், ஜாதகரின் குணபாவங்களைக் கணித்துக்கூறும்பொழுது இந்த முக்குணவேளையையும் , அந்த ஜாதகருக்கான பரிகார பலன்களைக்கூறும்பொழுது அந்த முகூர்த்தகால அதிதேவதாவையும் அறிந்து பலன் சொல்வதே சிறப்பு.!!  
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment