1, ஆவர்த்தம்:-
ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.
2, அனாவர்த்தம்:- பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3, புனராவர்த்தம்:- கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4, அந்தரிதம்:- கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.
கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் #அவசியமான_கிரியைகள்_பற்றிய #விளக்கம்.
கணபதி பூசை – செய்கின்ற காரியம் தடைகள் இன்றி இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
தனபூசை - திரவிய பாகம்: கும்பாபிடேகத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டுதலும் அவற்றை ஆகம விதிப்படி திட்டமிட்டு ஒதுக்கீடு செய்தலும். சேரும் நிதியைப் பதினொரு பங்காகப் பிரித்து,
3 பங்கு – யாகத்துக்கும்
1 பங்கு அபிஷேகத்துக்கும்
1 பங்கு ஆச்சாரியாருக்கும்
1 பங்கு ஏனைய குருமாருக்கும்
2 பங்கு பிராமண போசனுத்துக்கும்
2 பங்கு செபம், பாராயணம் செய்வோருக்கும், தானத்துக்கும்
1 பங்கு மண்டலாபிஷேகத்தும்
எனத் திட்டமிட்டுப் பங்கீடு செய்யும்படி ஆகமங்கள் கூறுகின்றன.
ஆச்சாரியவரணம் –
தகுந்த சிவாச்சாரியாரைத் தேர்தெடுத்து அவரிடம் கும்பாபிடேகக் கிரியைகளுக்கான பொறுப்பினை ஒப்படைத்தல். தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாச்சாரியார் பின்னர் தகுந்த சாதகாச்சாரியார், போதகாச்சாரியார், சாதகர், ருத்விக்குகள் முதலானோரை நியமிப்பார்.
அனுக்ஞை {அனுமதி வாங்குதல்} –
விப்ர அனுக்ஞை:
வேத ஆகம அறிவும், சைவ அநுட்டானமும் உள்ள் சான்றோர் சபையில் தட்சிணை, தாம்பூலம் சமர்ப்பித்து இக் கும்பாபிடேக கிரியைகளைச் செய்ய யான் தகுதி உள்ளவனா? என்று சபையோரிடம் வினவி அவர்களின் ஆமோதிப்பையும் அனுமதியையும் பெறுவது ஆகும்.
தேவ அனுக்ஞை:
செயல்களைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெறல். விநாயகர், மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகள், சண்டேசுவரரிடம் சென்று பூசித்து கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெறல்.
கணபதி ஹோமம் –
எடுத்த காரியம் விக்கினங்கள் இன்றி முடிய விக்கினேசுவரராகிய விநாயகருக்குச் செய்யும் அக்கினி காரியம் இந்த கணப்தி ஓமம் ஆகும்.
கிராம சாந்தி:
ஆலயத்தின் மேற்கு வீதியில் பந்தல் போட்டு செய்யப்படுவது. ஆலயச் சூழலில் நிலைகொண்டுள்ள துட்ட சக்திகள், ஆவிகளை கிரியை முடியும் வரை இடையூறு இல்லாமல் எல்லையை விட்டு விலகி நிற்கப் பணித்து வைரவருக்குக்காக பூசை, ஓமம், பலி கொடுத்துச் செய்யப்படும் பூசை.
இரட்சோக்ன பூசை:
கிரியைகள் முடியுமட்டும் ஆலயச் சூழலில் உள்ள அகோர தெய்வ மூர்த்தங்கள், கணங்களை விலக்கு முகமாக சதாசிவமூர்த்தியாகிய கட்கேசரையும், இரட்சோக்ன தேவதையையும் பூசித்து இரட்சோக்ன மந்திரத்தால் வெண்கடுகு, பருத்திக்கொட்டை, வேப்பெண்ணை முதலியவற்றால் செய்யப்படும் ஓமம்.
பிரவேச பலி:
அட்ட திக்குத் தெய்வங்களை அந்தந்த திக்குகளில் காவலாக நிலை நிறுத்துதல்.
பிரமத் தானம் – இலக்குமி – இங்கு இலக்குமியை நிலைநிறுத்தி அட்ட இலக்குமிகளை வீற்றிருக்க வேண்டுதல்.
கிழக்கு – இந்திரன் – இங்கு காவலாக உள்ள யட்சர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி முதலியன கொடுத்து அவர்களை மலை உச்சிக்கு அனுப்பி இங்கு இந்திரனை காவல் தெய்வமாக நிலைநிறுத்தல்.
தென்கிழக்கு – அக்கினி - இங்கு காவலாக உள்ள இராட்சதர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, மலைக்கு செல்லுமாறு பணித்து, காவலாக அக்கினியை நிலைநிறுத்துதல்.
தெற்கு – இயமன் – இங்கு காவலாக உள்ள பூதர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை பித்ரு தானத்துக்குப் போகுமாறு பணித்து இயமனைக் காவலாக நிறுத்துதல்.
தென்மேற்கு – நிருதி - இங்கு காவலாக உள்ள பைசாசர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை வன மத்தியில் செல்லுமாறு பணித்து இங்கு நிருதியைக் காவலாக நிறுத்துதல்.
மேற்கு – வருணன் – இங்கு காவலாக உள்ள பிரம்ம இராட்சதர்களைப் பூசித்துப், பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை நதிக்கரைக்குப்போகுமாறு பணித்து, இங்கு வருணனைக் காவலாக நிறுத்துதல்.
வடமேற்கு – வாயு – இங்கு காவலாக உள்ள காளியைப் பூசித்துப், பிரீதி செய்து, பலி கொடுத்து அவளைப் பரிவாரத்துடன் காட்டுக்குப் போகுமாறு பணித்து, இங்கு வாயுதேவனைக் காவலாக நிறுத்துதல்.
வடக்கு – குபேரன் – இங்கு காவலாக உள்ள சரளியென்னும் தேவதையைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவளைப் பரிவாரத்துடன் வான்மண்ண்டலத்துக்குச் செல்லுமாறு பணித்து, இங்கு குபேரனைக் காவலாக நிறுத்துதல்.
வடகிழக்கு – ஈசானன் – இங்கு காவலாக உள்ள பைரவரைப் ;பூசித்துப், பிரீதி செய்து, பலி கொடுத்து அவரை மயானத்துக்கு செல்லுமாறு பணித்து இங்கு காவலாக ஈசானனை நிறுத்துதல்.
சங்கல்பம் –
கும்பாபிசேகத்தில் அதற்குரிய கிரியைகள் செய்யப்போகின்றேன் என்று இறைவனிடத்தில் பிரமாணம் செய்தல்.
புண்ணியாகவாசனம்:
சுத்தி செய்யும் கிரியை – தான(இடம்) சுத்தி, உடல் (பூத) சுத்தி, ஆன்ம சுத்தி, திரவிய சுத்தி
வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபட்டு அழைத்தல்.
பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளைப் பூஜை செய்தல்.
பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திரங்களுடன் கூடிய நியாசங்களினால் (தொடுமிடம் தொடுதல்) மாற்றி அமைத்தல்.
பஞ்ச கவ்யம் – ஆன்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், கோசலம்,கோமயம் முதலியவைகளை வைத்துச் செய்யப்படும் கிரியை.
தான சுத்தி - வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
மிருத்சங்கிரஹணம் {மண் எடுத்தல்} -
அட்ட திக்குப் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்திலிருந்து மண் எடுத்து அப் பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமா தேவியை ஊறு செய்ததன் காரணமாக பூமா தேவியைப் பொறுதருளவேண்டிப் பூசித்துச் செய்யப்படும் கிரியை}
அங்குரார்ப்பணம் {முளையிடுதல்} -
எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் பன்னிரண்டு ஆதித்தர்களான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
ரக்ஷாபந்தனம் {காப்புக்கட்டுதல்} -
கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
தீர்த்த சங்கிரஹணம் – கும்பத்துக்கு தேவையான நீரை எடுத்தல்
கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
கலா கர்ஷ்ணம் {சக்தியை வருவித்தல்} –
பாலாலயத்தில் விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக வரவழைத்தல்.
யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
யாகபூசை:
சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரர்களை வழிபடுதல்.
மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
பேரசலனம்:
பாலாலயத்தில் தாபித்து இருக்கும் விக்கிரகத்தை அதில் இருந்து அகற்றி எடுத்தல்.
தீப தாபனம்
யந்திர தாபனம்
பிம்ப தாபனம்
அட்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் இறை விக்கிரகத்தை பீடத்துடன் பொருத்துதல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
தைலாப்பியாங்கம் - எண்ணெய் சாத்துதல்
பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
நாடி சந்தானம் –
யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தருப்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
விசேட சந்தி -
36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்கிய நீர் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்கியம் தருவது.
ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்கு ஸ்பரிசத்தின் மூலமாகவும் ஆகுதிகள் மூலமாகவும் கொண்டு சேர்த்தல்.
தூபித் தாபனம்: தூபிகளுக்கு கலசங்கள் பொருத்துதல்
பூர்ண ஆகுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
கும்பாபிஷேகம் {குடமுழுக்கு} -
யாக சாலையில் அந்தந்த மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூசிக்கப்பட்டு மந்திர சக்தி ஏற்றபட்ட கும்பத்து நீரை அந்தந்த இறை மூர்த்திகளுக்கு அபிடேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்கிரகத்தில் எழுந்தருள்கிறார்.
மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தை போல விக்கிரகத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிடேகம், பூசைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.
யாகசாலை குண்டங்களின் எண்ணிக்கை:
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – முப்பத்திரண்டு குண்டம் அமைத்தல்.
கும்பாபிடேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது இரண்டு காலம், நான்கு காலம், எட்டுக் காலம், பன்னிரண்டு காலம் வரை செய்யும் முறைமைகள் வழக்கத்தில் உள்ளன.
கும்பத்தின் விளக்கம் -
யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை சரீரமாக எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதை விபரமாகச் சொல்லுகிறது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும்,
குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும்,
கும்பத்தினுல் போடப்படும் இரத்தினங்கள் சுக்கிலம் ஆகும்,
கும்பத்தின் உள்ளே தர்ப்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும்,
குடத்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள நூல்களே நரம்புகளாகும்,
கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரமே தோல் ஆகும்
குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது,
தேங்காயின் மேலே விரித்துள்ள தர்ப்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகும்,
தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள் ஆகும்.
இங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று சிவாகமங்களில் விளக்கப்பட்டுள்ளது. .
. நன்றி
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment