Friday, February 23, 2024

மாசி மகம்

மகிமைகள் நிறைந்த 
                       மாகஸ்நாநம் ..!
      ‌‌              🌺🌺🌺🌺🌺🌺🌺

தமிழ் மாதங்களில் 11 -வது மாதமாக அமைவது மாசி மாதம்.
இறை வழிபாடாற்றலுக்கும்;
விசேஷங்களுக்கும்;  புண்ணிய நீராடலுக்கும் உகந்த மாதமாக இது விளங்குகின்றது.

கோளியல்படி,  ஒவ்வொரு மாதமும் சந்திர பகவானுக்குரிய பௌர்ணமி தினமானது அன்றைய தினம் கூடுகின்ற நக்ஷத்திரத்தின் அடிப்படையில்  இறை வழிபாட்டிற்குரிய புண்ணியதினமாக அமைவது வழமை.

அவ்வகையில்  மாசி மாதத்தில் சந்திர பகவான்  மக நட்சத்திரம் -சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் பௌர்ணமி கூடும் தினமானது 'மாசி மகம்' எனச் சிறப்பிக்கப் பெறும் புண்ணிய தினமாக அமைகின்றது.

வருடந்தோறும் சூரிய பகவான் கும்ப ராசியில் வலம் வரும் இம்மாசி மாதத்தில் 12 புண்ணிய நதிகளும்  தீர்த்தங்களில் புனித முழுக்காடி தாங்கள் சுமந்த மக்களின் பாவங்களைப் போக்கி தங்களை மீண்டும் சுத்தம் செய்து கொள்வதாக ஐதீகம்.  எனவே நமக்கும் மாசி மாதம் முழுவதுமே 
புனித நீராடலுக்குரிய புண்ணிய மாதமாக அமைகின்றது.
குறிப்பாக மாசி மகம் ஆனது  இறை வழிபாட்டுடன்  நீத்தார் வழிபாட்டிற்கும் உரிய தினமாகத் திகழ்கின்றது.

பண்டு நாட்களில் மாசிமக புனித நீராடலை  முந்நீர் விழா, மாசிமகக் கடலாடு விழா என்கிற பெயர்களில்   குறிப்பிட்டுள்ளனர்.
அறிவியல் ரீதியாக குறிப்பிட்ட கிரகநிலைகள் நிலவும் போது நாம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும்; பூஜை புனஸ்காரங்கள் , தானங்கள் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்வதும் உடல் மற்றும்  மனோரீதியாக அளவற்ற நற்பலன்களை அள்ளித் தருவது மறுக்க இயலாத உண்மை.

சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி அமைவது இம்மாதத்தில் தான்.
அதையொட்டி வரும் அமாவாசை தினமானது மிகுந்த நற்பலன்களைத் தந்திடும்  வழிபாட்டு தினமாக அமைகின்றது.

ஆடல்வல்லானுக்குரிய ஆறு வருடாந்திர திருமஞ்சனங்களில் மாசி சதுர்த்தசி தின அபிஷேகமும் ஒன்று.

பொதுவாக மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்குரிய  மாதமாகும்.  எனவே, மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாக அமைகின்றது.

அன்னை உமையவள் தக்ஷனின் மகளாக அவரது நீண்டகால தவத்திற்குப் பலனாக தாமரை மலரில் அமைந்த  சங்கொன்றில்  அவதரித்தது இந்த மாசி மகம் அன்றுதான். இத்தினத்தில் அம்பிகையை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
எனவே, அம்பிகைக்கு உரிய  பெண்கள் போற்றக்கூடிய மாதமாக இது அமைகின்றது.
மாசியில் திருமணம் ஆகும் பெண்கள் நீண்ட சுமங்கலித்துவம் பெற்று வாழ்வார்கள் என்பது நமது நாட்டின் தொன் நம்பிக்கை.
இதனையொட்டி 'மாசிக் கயிறு பாசி படரும்' என்ற சொல் வழக்கும்
நம்மிடையே உண்டு. 

இம்மாத இறுதியில் அமையும்  காரடையான் நோன்பு அன்று திருமாங்கல்யச்சரடு 
மாற்றிக்கொள்வதும்; நோன்பு சரடு அணிவதும் பெண்களால்  தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படும் மரபு.

அந்தணர்களுக்குரிய பூணூல் அணிவிக்கும் சடங்கான  'உபநயனம்' எனப்பெறும் வைதீகநிகழ்வினை இம்மாசி மாதத்தில் செய்வது சிறப்பானதாகக் கருதப் படுகின்றது.

குபேரன் சாப நிவர்த்தி பெற்று செல்வவளம் அடைந்தது மாசி பௌர்ணமி தினத்தில் தான்.
அருகிலுள்ள சிவாலயங்களில் குபேர லிங்கங்கள் இருப்பின் இந்நாளில்  அவற்றை வழிபட்டு அளப்பறிய பலன்களைப் பெறலாம்.

விநாயருக்குரிய  சதுர்த்தி விரதங்களைத் தொடர எண்ணுபவர்கள் இம்மாதத்தில் துவக்குவது மரபு.

மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தீர்த்தக் கரைகளில் நீத்தார் வழிபாடாற்றுவதன் மூலம் பித்ருக்களின் ஆசிகள் கிட்டும்.
தவிர அன்றைய தினம் கம்பளி, சந்தனம், பசு போன்றவற்றை அந்தணர்களுக்கு தானம் செய்திட தோஷங்கள் அகன்று குடும்பத்தில் மேன்மைகள் உண்டாகும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.

பெளர்ணமியை பிரதானமாகக் கொண்டு இறைவழிபாடு செய்பவர்கள் இரவில் தங்கும் அளவினைக் கணக்கிட்டு   மேற்கொள்வர். 
தீர்த்தக் கரைகளில் முன்னோர் வழிபாடாற்றுபவர்கள்  மக நட்சத்திரம் சூரியோதய காலத்தில் தங்கும் நேரத்தினைக் கணக்கிட்டு செய்வர்.
நீத்தார் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மாசிமகத்தன்று 'திதி கொடுப்பது' என்ற பித்ரு வழிபாட்டினை ஆற்றுவது இன்றளவும் நம் மரபு சார்ந்த தொன்வழமையாக உள்ளது. 

இவ்வளவு புண்ணிய பலன்களைத் தந்திடும் மாக ஸ்நாநம்  மற்றும் வழிபாடுகளை இயன்ற அளவு செய்து அளவற்ற நன்மைகளை அடைய முயற்சிக்கலாமே..!

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment