Tuesday, September 27, 2016

மனு, பெண்ணுரிமை, பிராமணீயம்

முதலில் “மனு” என்பது ஒரு பதவியின் பெயர். அந்த மனு என்னும்  பதவிக்கு க்ஷத்ரியர்கள்தான் வரமுடியும் “மனுவாக” ஒரு பிராமணர் வரமுடியாது. எனவே, இதில் எங்கு ஆரியம் / பிராமணீயம் வந்து ஒட்டிக்கொண்டது எனத் தெரியவில்லை.

     மனுவினை எதிர்ப்பவர்கள் கூட இன்றும் தமிழக அரசு சார்பில் நடக்கும் “மனுநீதி” நாளை அந்த மனுவின் பெயரில் தான் சிறப்பிக்கிறார்கள் என்பது வேடிக்கை..

மனுவில் பெண் உரிமை

1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக்கூடாது. (மனு 2-52)
2)  எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.
எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)
3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)
4)   நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)
5)  கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)
6)        குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண்  இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394)
7)        இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)
8)   எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)
9)           கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10)  அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57) 
11)    பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)
12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)

பிராமணீயம்

     அடுத்து பிராமணர்கள் வேறு எந்த ஜாதியரையும் அடக்கி விட்டார்களாம், அதற்கு ஆன்மீகம் என்பது ஆயுதம், சூழ்ச்சி என்பார்கள்.


     பிராமணர்கள் மற்ற வர்ணத்தினர் தந்த ஞான செல்வத்தினை ஜாதி வர்ண பேதமின்றி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை காண்போமா?

     பிராமணர்களை பெரும்பாலும் அடையாளம் காட்டுவது பூணல்.  க்ஷத்ரியர்கள், வைசியர்கள் பூணல் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்ட காலத்தில் பூணல் பிராமணர்களின் தனி அடையாளம் என்கிற ரீதியில் வெறுப்பாளர்கள், எதிர்பாளர்களால் அடையாளப் படுத்தப்படுகிறது.

     பூணலில் முக்கியமானது  தந்தை மகனுக்கு உபதேசிக்கும் “காயத்ரீ” என்னும்  மந்திர உபதேசம்.  இந்த காயத்ரீயை கண்டு வெளிப்படுத்தியவர் (திருஷ்டா) விஸ்வாமித்ரர். இவர் க்ஷத்ரியர். பிறப்பால் பிராமணர் அல்ல. பிராமணர்களின் முக்கிய சடங்கான பூணலில் உபதேசிக்கப்படும் மந்திரம்   பிராமணர் கண்ட மந்திரமல்ல.

     பிராமணன் காயத்ரீ ஜபத்தினாலேயே மோக்ஷத்தினையடைகிறான். இதில் சந்தேகமில்லை. மனு இரண்டாம் அத்தியாயம் 87 வது ஸ்லோகம்

     பிராமணர் பெரிதும் போற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் மகாபாரதத்தில் உள்ளது. இன்றும் ஜோதிடர்கள் பிராயாச்சித்தம் என பிராமணர்களுக்குக்கூட கூறுவதில் முக்கியமானது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்.
     இந்த  ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் க்ஷத்திரியரான  ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்துதி. இதையும் பிராமணர்கள் உருவாக்கவில்லை மாறாக வர்ண பேதமின்றி ஸ்துதித்து வணங்குகின்றனர்.

     அடுத்து பிராமணர்கள் போற்றும் இதிகாசம் இரண்டு அதில் முதல் ஸ்ரீ ராமாயணம் அதை எழுதியது பிராமணரா? என்றால் இல்லை. ஸ்ரீ வால்மீகி என்னும் ரிஷி அவர் வேடுவகுல ஜாதி, அடுத்த காவியமாம் உயர்ந்த தத்துவ நூலாம் கீதையைக் கொண்ட ஸ்ரீ மஹாபாரதம் அதை எழுதியவரான ஸ்ரீ வியாசர் அவரது தாயோ ஒரு மீனவ பெண்மணி.

     கீதையை சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ இடையர்குலம். பிராமணனாகிய ராவணனை வதம் செய்ய  ஸ்ரீ ராமன் அவதரித்ததோ  க்ஷத்ரியர் குலம்.

     பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்தார்கள் என்பதற்காக ஸ்ரீ ராம , ஸ்ரீ கிருஷ்ண நாமங்களை பிராமணர்கள் ஜபிக்காமல் இல்லை. சொல்லப் போனால் அதை உச்சரித்துக்கொண்டே காலம் கழிப்பது மோட்சத்திற்க்கு வழி என பலர் வாழ்கின்றனர்.

     தசாவதாரங்களில் இரண்டு அவதாரங்கள் மட்டுமே பிராமண அவதாரம் அவை வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் அவை இரண்டுக்கும் பாரத தேசமெங்கும் கோவில் இல்லை என்பது தானே உண்மை. பிராமணீயத்தினை உயர்த்திட எண்ணியிருந்தால் இந்த இரண்டு அவதாரங்களுக்குக்தானே கோவில்கள் கட்டியிருக்கவேண்டும்.

     தொட்டதற்கெல்லாம் பிராமண சூழ்ச்சி என உணர்ச்சிவசப்படும் “பகுத்தறியாதவர்கள்” இந்த வழிபாட்டு முறையினை சிந்திக்கவேண்டும்.
     மஹாபாரதம் சாந்தி பர்வம் 85வது அத்தியாயம் ராஜ தர்மத்தினை பற்றி பீஷ்மர் தர்மருக்கு உபதேசிக்கிறார் அதில் அமைச்சர்களினை தேர்வு செய்வது குறித்து கூறும்போது....

      பீஷ்மர், பிரும்மச்சர்யத்தினை முடித்த, கற்ற பரிசுத்தமுள்ள பிராமணர்கள் நால்வரையும், பலசாலியான ஆயுதமுள்ள 18 க்ஷத்திரியர்கள், நிறைந்த பொருளுள்ள 21 வைசியர்களையும், மூன்று சூத்திரர்களையும் அமைச்சர்களாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

     முற்றிலுமாக நான்காம் வர்ண ஜாதியினரை அடிமையாக்கிவிட்டது உங்கள் மதம் என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது.

     பெருமாள் கோவில்களில் எல்லோரது தலையிலும் வைக்கப்படும் “சடாரி” என்பது நம்மாழ்வார் எனப்படும் பிராமணரல்லாத அதுவும் வர்ணத்தின்படி நான்காம் வர்ணத்தினர் காலடிகள் / திருவடிகள்.

 
     எந்த பிராமணரின் காலடிகளும் திருவடிகளாக சடாரியாக கோவில்களில் இல்லை என்பதையும், ஜாதி வர்ணம் என்பதை விலக்கி ஞானத்தினை முன்னிறுத்தியதே நமது தேசத்தின் பண்பாடு, ஆன்மீகம், மதம், கலாசாரம் மற்றும் உயர்ந்த மரபு வழியாகும்.

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment